×

பரமக்குடி வட்டார விவசாயிகள் கடன் அட்டை பெறலாம் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்

பரமக்குடி, பிப்.20:  பரமக்குடி வட்டார விவசாயிகள் கடன் அட்டை பெற்றுக் கொள்ளுமாறு பரமக்குடி  வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய,மாநில அரசுகளால் பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் மற்றும் இதர தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் உழவர் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் பரமக்குடி வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்களில் விவசாயிகள் கலந்துகொண்டு, அங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் நிலவுடைமை ஆவணங்கள், அடங்கல், 2 புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். அடுத்த 15 தினங்களுக்குள் விவசாய கடன் அட்டை வழங்கப்படும். இந்த கடன் அட்டை மூலம் விவசாயிகள் தங்களுடைய சாகுபடி நிலத்தின் பரப்பளவிற்கு ஏற்றவாறு, ஒரு ஆண்டில் அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்யப்படும் மொத்த பயிர்களுக்கும், அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் பயிர் கடன் அளவின் அடிப்படையில் தேவைப்படும் பயிர்க்கடனை மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் தேவைப்படும் கடன் தொகையினை தேவைப்படும் காலங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். வருமானம் வரும் போது கடனை திரும்பச் செலுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு பருவத்திற்கும் பயிருக்கும் தனித்தனியாக கடன் பெற வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் விவசாயிகள் சாகுபடி சிறப்பாக செய்து உற்பத்தி அதிகரிப்பதோடு, வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம். எனவே இந்த தருணத்தை பயன்படுத்தி பரமக்குடி வட்டார விவசாயிகள் அனைவரும் விவசாய கடன் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என பரமக்குடி வட்டார வேளாண்மை அலுவலகத்தின் உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Paramakudi Regional ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை