கல்லாவி காப்புக்காடு பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

போச்சம்பள்ளி, பிப்.19: கல்லாவி காப்பு காடு பகுதியில் விலங்குகளின் தாகத்தை போக்கும் வகையில், அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.கோடை தொடங்கும் முன்பே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்பம் தகித்து வருவதால், வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில், வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வனத்தையொட்டியுள்ள பகுதியில் தற்காலிக தண்ணீர் தொட்டி ஏற்படுத்தி, அதில், தண்ணீர் நிரப்பும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி வனச்சரகர் நாகேஷ் அறிவுரையின்படி, கல்லாவி வனவர் துரைக்கண்ணு தலைமையில் கல்லாவி காப்பு காட்டில் பல்வேறு இடங்களில் தண்ணீர் நிரப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் ஊருக்குள் வரக்கூடிய இடங்களை ஆய்வு செய்து, அங்கு தற்காலிக தொட்டி ஏற்படுத்தி டிராக்டர் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட தண்ணீரை முழுவதுமாக நிரப்பும் பணியை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். இதன்மூலம் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் விலங்குகளை தடுக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: