×

கண்மாய் உபரிநீர் வரும் பாதையில் டிவைடிங் டேம் அமைக்காமல் தண்ணீர் திறக்க மக்கள் எதிர்ப்பு

சிவகங்கை, பிப்.18: மானாமதுரை அருகே ராஜகம்பீரம் கண்மாய் உபரிநீர் வரும் பாதையில் டிவைடிங் டேம் அமைக்காமல் நீர் திறக்க வேண்டாம் என அன்னவாசல் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறை தீர் கூட்டத்தில் அன்னவாசல் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அன்னவாசல் மற்றும் புதூர் கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். இந்த கிராமத்திற்கும் ஜீவாதாரமாக இருப்பது அன்னவாசல் கண்மாய் ஆகும். இக்கண்மாய் மூலம் சுமார் 526 ஏக்கர் விவசாய நிலம் பயன்பட்டு வருகிறது. இக்கண்மாய்க்கு மழைக்காலங்களில் ராஜகம்பீரம் கண்மாயில் இருந்து உபரி நீர் வரும். இந்த உபரி நீர் மட்டுமே இக்கண்மாய்க்கான நீர் ஆதாரம் ஆகும். எங்கள் கண்மாய்க்கான கால்வாய் மேட்டுப்பகுதியாகும். இந்நிலையில் ராஜகம்பீரம் கண்மாயில் இருந்து வரும் உபரி நீரை கிளங்காட்டூர் கண்மாய்க்கு தாழ்வான கால்வாய் மூலம் கொண்டு செல்ல கிளங்காட்டூர் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் முயற்சித்து இப்பிரச்சினை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் தாழ்வான கால்வாய் வழி நேரடியாக நீர் கொண்டு செல்லப்படாமல் டிவைடிங் டேம் அமைத்து குறிப்பிட்ட அளவின்படி அன்னவாசல் கண்மாய்க்கு நீர் குறையாமல் கிளங்காட்டூர் கண்மாய்க்கு நீர் கொண்டு செல்லலாம் என தீர்ப்பு வந்தது. ஆனால் இதுவரை டிவைடிங் டேம் கட்டப்படவில்லை. இந்நிலையில் ராஜகம்பீரம் கண்மாய் வரும் உபரி நீரை கிளங்காட்டூர் கண்மாய்க்கு தாழ்வான கால்வாய் மூலம் கொண்டு செல்ல கிளங்காட்டூர் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதனால் அன்னவாசல் கண்மாய்க்கு நீர் கிடைக்காது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும். கிராம மக்களுக்குள் பிரச்சினை ஏற்படும். எனவே டிவைடிங் டேம் கட்டாமல் நீர் திறக்க அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு
தெரிவித்துள்ளனர்.

Tags : springs ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி