ம.வடக்குத்தாங்கல் கிராமத்தில் மூடி கிடக்கும் ரேஷன் கடையை திறக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி, பிப். 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்த ம.வடக்குத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் முருகன் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருக்கோவிலூர் தாலுகா மணலூர்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மணலூர்பேட்டை நெ.1வது ரேஷன் கடையில் இருந்து 210 குடும்ப அட்டைகளை பிரித்து ம.வடக்குத்தாங்கல் கிராம பகுதிக்கு தனியே ஒரு பகுதிநேர ரேஷன் கடை திறக்கவும், மணலூர்பேட்டை நெ.1வது ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தை ம.வடக்குத்தாங்கல் கிராம பகுதிக்கு புதியதாக தொடங்க உள்ள பகுதி நேர ரேஷன் கடைக்கு பயன்படுத்தவும் ஆணையிட்டு ம.வடக்குத்தாங்கல் கிராமத்தில் ரேஷன் கடையானது எம்.பி. நிதியில் கட்டப்பட்டது.

Advertising
Advertising

அக்கட்டிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி திறக்கப்பட்டன. ஆனால் இதுநாள் வரையில் அந்த ரேஷன் கடை கட்டிடம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் ம.வடக்குத்தாங்கல் கிராம மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர். பகுதி நேர ரேஷன்கடை திறக்க உத்தரவு வழங்கியும் இதுநாள் வரையில் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி பொது விநியோக பொருட்கள் ம.வடக்குத்தாங்கல் கிராமத்திலேயே கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: