மினி லாரி, அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்

நெல்லை, பிப். 12: பாபநாசத்தில் இருந்து நெல்லை புதிய பஸ்நிலையம் நோக்கி நேற்று காலை 9 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இதுபோல் பாளையில் இருந்து சேரன்மகாதேவியில் உள்ள செங்கல் சூளைக்கு மினி லாரி புறப்பட்டு சென்றது. சேரன்மகாதேவியை சேர்ந்த ஆனந்தன்(46) என்பவர் மினிலாரியை ஓட்டினார். கோபாலசமுத்திரம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தை மினி லாரி முந்திச்செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பஸ் மற்றும் பைக் மீது மினி லாரி மோதியது. இதனால் அரசு பஸ், சாலையோரப்  பள்ளத்தில் சரிந்தது. மினி லாரியும் துண்டு துண்டாக உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் மினி லாரி டிரைவர்  ஆனந்தனுக்கு கால்முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதுபோல் பைக்கில் வந்த சுத்தமல்லியைச் சேர்ந்த நடராஜன்(65) என்பவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த டேனியல் மனைவி லீலாபாய் (40), கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த நடராஜன் மனைவி ராமலட்சுமி (50) ஆகிய இரு பயணிகளும் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: