கிருஷ்ணகிரி, பிப்.7: கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில், தண்ணீர் விழும் இடத்தை ஆய்வு செய்ய அணை பாதுகாப்பு குழுவினர் வரவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி அணையில் 8 பிரதான மதகுகள் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஒரு மதகு உடைந்துவிட்டது. இதையடுத்து, அந்த மதகை கடந்த 2018ம் ஆண்டு அகற்றிவிட்டு, புதிய மதகை பொருத்தினர். மற்ற 7 மதகுகளையும் மாற்ற வேண்டுமென அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மற்ற 7 மதகுகளையும் அகற்றி விட்டு, புதிய மதகுகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அணையில் இருந்து பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கும்போது, கீழே உள்ள 6 அடி பள்ளத்தில் விழுந்து, பின்னர் ஆற்றில் ஓடும்படி அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கீழே விழும் பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த அந்த 6 அடி பள்ளத்தில் 23 பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.