சோலார் விளக்குகள் `அவுட்’ இருளில் தவிக்கும் மலைக்கிராமங்கள்

வருசநாடு, பிப்.4: வருசநாடு அருகே  சோலார் விளக்குகள் பழுதடைந்துள்ளதால் மலைக்கிராமங்களில் இருளில் மூழ்கித் தவிக்கின்றன. வருசநாடு அருகே வெள்ளிமலை, அரசரடி, இந்திராநகர், பொம்மராஜபுரம், நொச்சிஒடை, ஐந்தரைப்புலி, குழிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த இரண்டு மாத காலமாக சோலார் விளக்குகள் பழுதடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தரப்பில் சோலார் விளக்குகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மேகமலை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது. அது மழைக்காலத்தில் சேதமடைந்தது. இதனால் சோலார் விளக்குகள் இரவு நேரங்களில் சில மாதங்களாக வெளிச்சம் தருவதில்லை.  இந்நிலையில் இரவு நேரத்தில் கற்காலத்தை போல் தீ மூட்டம், அரிக்கேன் விளக்கு, மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் விளக்கு உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி வருவதால் பொது மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

 இதுகுறித்து மேகமலை ஊராட்சி மன்ற தலைவர் பால்கண்ணனிடம் கேட்டதற்கு,`` நான் தற்போது தான் ஊராட்சி மன்ற தலைவராக வந்துள்ளேன். அனைத்து மலைக்கிராம பொதுமக்களுக்கும் இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளிடம் பேசி விரைவில் சோலார் விளக்குகள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்வேன். மேலும் பாதிப்படைந்த சோலார் விளக்குகளுக்கு புதிதாக வழங்க தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம்’’ என்றார்.

Related Stories: