இளம்பிள்ளை அருகே நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் அதிர்ச்சி

இளம்பிள்ளை, ஜன.30: இளம்பிள்ளை அருகே நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இளம்பிள்ளை அருகே, காடையாம்பட்டியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுற்றுவட்டார விவசாயிகள் பயனடைந்து வந்தனர். இந்த ஏரிக்கு சித்தர்கோவில் கஞ்சமலையில் இருந்து, மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் வருவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காடையாம்பட்டி ஏரிக்கு மழை தண்ணீர் வருவது தடைப்பட்டுள்ளது.  

இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், காடையாம்பட்டி ஏரி பகுதியில் தனிநபர்களுக்கு சொந்தமான வீட்டுமனைகள் விற்பனை செய்வதற்காக, அரசியல் பிரமுகர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஏரிக்கு வரும் நீரோடைகளை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஏரியில் வண்டல் மண் எடுக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நீரோடைகள் தூர்வாரப்படவில்லை. மேலும், ஓடை ஆக்கிரமிப்பால் ஏரிக்கு வரும் மழைநீர் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்து ஏரி, குளம், குட்டைகளுக்கு மழைநீர் வருவதை அதிகாரிகள் உறுதி செய்து வேண்டும். ஏரி மற்றும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: