×

நெல் மகசூல் இருந்தும் செலவு செய்த பணம் கூட கிடைக்க வில்லை l விரக்தியில் விவசாயிகள் l கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

சாயல்குடி, ஜன.23:  கடலாடி,சாயல்குடி பகுதியில் 10 வருடங்களுக்கு பிறகு நல்ல விளைச்சலால் நெல் அறுவடை நடந்து வருகிறது. குறைவான விலைக்கு போவதால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி தாலுகாவில் மானாவாரி எனப்படும் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த  10 ஆண்டுகளாக ஏற்பட்ட தொடர் வறட்சியால் விவசாயம் பொய்த்து போனது. விவசாயிகளும் கடன் வாங்கி விவசாயம் செய்து, தொடர் ஏமாற்றத்தால் வறுமையில் சிக்கி தவித்தனர். இதனால் நூறுநாள் வேலை, சீமை கருவேல மரம் வெட்டுதல், கரிமூட்டம், உப்பளம் உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு இப்பகுதியின் பிரதான மழையான  வடகிழக்கு  பருவ மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்தது. இதனால் விவசாயிகள்  நெல், மிளகாய், கம்பு, சோளம், மல்லி போன்ற பயிர்களை பயரிட்டனர். களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வந்தனர்.

ஆனால் கடலாடி, சாயல்குடி பகுதியின் சில இடங்களில் மட்டும் போதிய நீர் வரத்து இன்றி கண்மாய், குளம், பண்ணைகுட்டைகள் முழுமையாக நிரம்பவில்லை. கதிர் விடும் தருவாயில் இருந்த நெல் பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருக தொடங்கின. இதனால் டிராக்டர், டேங்கர்களில் விலைக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர். இதனால் நல்ல மகசூல் கிடைத்து. தற்போது அறுவடை நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் நெல் அறுவை இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்து நெல்லை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஞ்சியிருக்கும் வைக்கோல்களை தங்களது கால்நடைக்கு போக மீதவற்றை விலைக்கு விற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடலாடியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிட்டங்கில்  நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காததால் வெளி வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று வருவதால், போதிய லாபம் கிடைக்கவில்லை. செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கடலாடி பகுதி விவசாயிகள் கூறும்போது, கடந்த காலங்களில் பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் செய்ய முடியவில்லை.  விவசாயத்திற்கு செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை. பயிர்காப்பீடு தொகையும் முழுமையாக வரவில்லை. இதனால் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்தோம். ஆனால் இந்தாண்டு நல்ல மழை பெய்தது. விவசாயமும் ஓரளவிற்கு நன்றாக வந்துள்ளது.

கதிர் அறுவடை நடந்து முடியும் நிலையில் கூட, இன்னும் கடலாடி அரசு நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் நேரடியாக கொள்முதல் செய்யவில்லை. கலெக்டர் கடலாடி  கடுகுசந்தை, கிடாத்திருக்கையில் நடமாடும் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இன்னும் திறக்கவில்லை. இதனால் கிராமத்திற்கு வரும் நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இப்பகுதியில் ஆடுதுறை 45, குளிஅடிச்சான், சித்திரைகாரி, புதிய ரகமான கோ 51, அண்ணா 4 போன்ற நெல் விதைகளை 40 கிலோ மூட்டையை ரூ.1000 முதல் 1500 வரை விலைக்கு வாங்கினோம். ஆனால் அறுவடை செய்த ரூ.66 கிலோ எடைகொண்ட ஒரு மூட்டையை வெறும் ரூ.850க்கு வாங்குகின்றனர். இந்த விலை போதுமானதாக இல்லை. இதனால் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. எனவே அரசு வாணிப கிட்டங்கிகளில் கட்டுபடியாகும் விலைக்கு நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். வாகன செலவு, நாட்கணக்கில் காத்திருப்பு போன்றவற்றை தவிர்க்க கிராமங்களுக்கு அலுவலர்கள் வந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : procurement center ,
× RELATED பால் கொள்முதல் மையம் துவக்கம்