அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வரும் கூர்கா சமுதாயத்தினர்

உளுந்தூர்பேட்டை, ஜன. 22: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகர பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர் உள்ளிட்டவர்கள் இரவு மற்றும் பகல் நேரத்தில் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், நேபாளத்தில் இருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டைக்கு வந்த கூர்கா சமுதாயத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் இரவு நேரத்தில் மட்டும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் அனைவரும் இரவு 10 மணிக்கு மேல் சைக்கிள் மற்றும் நடந்தும் தெரு, தெருவாக டார்ச் லைட் அடித்தும், விசில் ஊதியபடியும் பொதுமக்களின் காவலனாக இருந்து வருகின்றனர். இதற்கான மாதந்தோறும் பொதுமக்கள் கொடுக்கும் ரூ 10, ரூ 20 பணத்தை வைத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அண்ணாநகர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டிற்கு மேற்கூரை மற்றும் மின்சாரம் இல்லாமல் குழந்தைகளுடன் கடும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி கொசுக்கடியினால் தொற்று நோய் ஏற்பட்டு பாதிப்பு அடைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். நகரப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளை இரவு முழுவதும் கண்விழித்து பார்த்து வரும் கூர்கா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் வசிப்பதற்கு போதிய இடம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களின் குடும்பத்தை பாதுகாக்க வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: