சாலை பாதுகாப்பு வார விழா துவங்கியது பெண்கள் ஹெல்மெட் அணிந்து பேரணி

ஊட்டி, ஜன. 21:சாலை பாதுகாப்பு வார துவக்க விழா ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்பி. சசிமோகன் கலந்து கொண்டு பெண்கள் ஹெல்மெட் அணிவதன் கட்டாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.  பேரணி, லோயர் பஜார், கமர்சியல் சாலை வழியாக சேகரிங்கிராசை சென்றடைந்தது. பேரணியின் போது, பெண்கள் ஹெல்மெட் அணிந்து சென்றதுடன், விழிப்புணர்வு வாசங்களையும் ஏந்திச் சென்றனர். இதில் பெண் காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஆர்டிஓ., கதிரவன், டிஎஸ்பி., சரவணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் குலோத்துங்கன், நல்லதம்பி, அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இன்று சாலை பாதுகாப்பு குறித்த ஊர்வலம் நடக்கிறது. இதில், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், வாகன விற்பனையாளர்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பள்ளி வாகன ஓட்டுநர்கள், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்கள் பயன்பெறும் வகையில் 22ம் தேதி (நாளை) ஊட்டி ஆர்டிஓ., அலுலவலகத்தில் இலவச மருத்துவ உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. 23ம் தேதி ஊட்டி ஜெல் மெம்ேமாரியல் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியம், பேச்சு, சிறந்த சாலை பாதுகாப்பு வாசக போட்டிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

24ம் தேதி ஊட்டி அருகேயுள்ள சிஎஸ்ஐ. கல்லூரியில் அதிக வேகம், அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கை தாண்டுதல், வாகனம் இயக்கும் போது செல்போன் பேசுதல் போன்ற சாலை பாதுகாப்பு விதி மீறல்கள் குறித்தும், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 25ம் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை இணைந்து சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளுதல், கூடலூர் சோதனை சாவடியில் சாலை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்குவது, இரவில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து அறிவுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி சாலை பாதுகாப்பு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகித்தல் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

Related Stories: