அதிக விபத்து நடக்கும் சின்னசேலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தேவை

சின்னசேலம், ஜன.22:  அதிக விபத்துகள் நடந்து வரும் சின்னசேலம், நைனார்பாளையம் பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என்று சின்னசேலம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் போக்குவரத்து துறையும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும் இணைந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு பெறும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுவது வழக்கம். அதாவது வாகன ஓட்டிகள் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, முறையான பயிற்சி இல்லாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் வாகன விபத்துகள் நடப்பதுடன், உயிர்பலி சம்பவங்களும் நடக்கிறது. இதை தடுக்கவே அரசு எடுத்துவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது.

Advertising
Advertising

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி இருந்தவரை இந்த சாலை பாதுகாப்பு வார விழா கள்ளக்குறிச்சியில் ஒரு சம்பிரதாய விழாவாக மட்டுமே நடத்தப்படும். உண்மையிலேயே விபத்துகளை தடுத்திடும் வகையில் விழப்புணர்வு பேரணி, குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில், கிராமங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். ஆனால் சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்த வேண்டிய உயர் அதிகாரிகள் கள்ளக்குறிச்சி மைய பகுதியில் மட்டும் பேரணியை துவக்கி வைத்து விட்டாலே விபத்து குறைந்து விடும் என நினைக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாகன விபத்துகள் பெரும்பாலும் சின்னசேலம், கல்வராயன்மலை பகுதியில்தான் அதிகம் நடக்கிறது. ஆகையால் சின்னசேலம், கல்வராயன்மலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும், நகர பகுதியின் முக்கிய இடங்களிலும் போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும். மேலும் அந்த பகுதிகளில்  சாலை போக்குவரத்து விதிகளை மாணவர்களும், கிராமப்புற இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் சாலை பாதுகாப்பு வார விழாவை சிறப்பாக நடத்தி விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.                

Related Stories: