தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜன.13: திருப்பூரில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க  தொழிலாளர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டுமென பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு மக்கள் விழிப்புணர்வு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்ப்ரேட் பின்னலாடை நிறுவனங்கள், சிறு, குறு, ஜாப்-ஒர்க் நிறுவனங்களில் எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள்  பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் பகுதியில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் இருப்பதால் புதிய தொழிலாளர்களுக்கு தொழில் நுணுக்கங்களை கற்றுத்தருகின்றனர். விவசாயத்திற்கு அடுத்த நிலையில் ஜவுளி சார்ந்த தொழிலை தொழில் அதிபர்கள் செய்துவருகின்றனர்.

ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், இத்தாலி, அமெரிக்கா, ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகளுக்கு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றனர். பின்னலாடை இயந்திரங்களை இயக்குவது எளிதாக இருப்பதால் பெண் தொழிலாளர்கள் அதிகளவு வேலை செய்கின்றனர். இதற்காக கல்வித்தகுதி தேவையில்லை. ஒரே வாரத்தில் கற்றுக் கொள்ள முடிகிற எளிதான வேலையாக உள்ளது.  12 மணி நேரத்திற்கு ரூ.250 ல் இருந்தது 350 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கின்றனர். இந்த சம்பளம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறையாக இருப்பதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் குறைவான சம்பளத்திற்கு வடமாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து வேலை கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு நுட்பமான வேலைகள் செய்வதில் தெளிவு இல்லாததால் குறைபாடுகள் நிறைந்த ஆடைகளை அதிகளவு தைக்கின்றனர். இதனால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் இழப்பை சந்திக்கின்றனர்.  திருப்பூரில் இயங்கும் 80 சதம் கம்பெனிகளில் ஆள் பற்றாக்குறையால் ஆட்கள் தேவை என்ற போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறைக்கு காரணம்  பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறைவான சம்பளம் வழங்குவதோடு அதிகப்படியான வேலை நேரமாக உள்ளது. இதனால், தொழிலாளர்கள் சில மாதங்களிலேயே தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது தொடர்கதையாக உள்ளது.  இதனால், அடிக்கடி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுவதால் குறித்த நேரத்தில் ஆடைகளை தைத்து பல்வேறு நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கி இ.எஸ்.ஐ., பி.எப் பிடித்தம், பணி நிரந்தரம் உட்பட பல்வேறு அடிப்படை உரிமைகள் செய்து கொடுத்தால் மட்டுமே தொழிலாளர்கள் ஒரே நிறுவனத்தி–்ல் நிரந்தரமாக பணியாற்றுவார்கள். இதை பின்னலாடை உற்பத்தியாளர்கள் செய்து கொடுக்க வேண்டுமென மக்கள் விழிப்புணர்வு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories: