மேல் புவனகிரி ஊராட்சியில் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கை மதியம்வரை அறிவிக்காததால் அதிருப்தி

சேத்தியாத்தோப்பு, ஜன. 3: மேல்புவனகிரியில், வாக்கு எண்ணும் மையத்தில் பகல் 12.30 மணிவரை முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படாததால் வேட்பாளர்கள், முகவர்கள் கடும் விரக்தி அடைந்தனர். மேல்புவனகிரி ஒன்றியத்தில் 47 ஊராட்சி தலைவர், 15 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர் மற்றும் 324 வார்டு உறுப்பினர் என 387 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட கவுன்சிலருக்கு 10 பேர், ஒன்றிய கவுன்சிலருக்கு 112 பேர், ஊராட்சி தலைவருக்கு 237 பேர் மற்றும் வார்டு உறுப்பினருக்கு 862 பேர் என ஆயிரத்து 221 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் 1, ஊராட்சி தலைவர் 3 மற்றும் வார்டு கவுன்சிலர் 4 என 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, ஆயிரத்து 213 மனுக்கள் ஏற்கப்பட்டது. 175 வாக்குச்சாவடியில் தேர்தல் நடந்தது.இதை தொடர்ந்து நேற்று புவனகிரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தரை தளத்தில் 6, முதல் தளத்தில் 7 மற்றும் இரண்டாம் தளத்தில் 6 என மொத்தம் 19 அறைகளில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இதில் தபால் ஓட்டுகள் 310 பதிவானதில், 14 ஓட்டுப்படிவம் தள்ளுபடி செய்யப்பட்டு, 296 ஏற்கப்பட்டது. இந்நிலையில், பகல் 12.30 மணி வரை முதல் சுற்று வாக்கு பதிவு மற்றும் தபால் ஓட்டு என எந்த முடிவையும் அறிவிக்காததால், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அவதியடைந்தனர்.இதில் வேட்பாளர் ஒருவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாக்கு எண்ணிக்கை மந்தகதியில் நடந்ததற்கு அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு முறையான பயிற்சி, நிர்வாக திறன் இல்லை என பலரும் குற்றம்சாட்டினர். வாக்கு எண்ணிக்கையை தேர்தல் பார்வையாளர் முனியநாதன், தாசில்தார் சத்தியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.  

Related Stories: