சுயேட்சை வேட்பாளருக்கு பதிலாக தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்ததால் பரபரப்பு

விருத்தாசலம், ஜன. 3:தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 1வது வார்டு, டி.மாவிடந்தல், சிறுவம்பார், விசலூர், காட்டுப்பரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கான ஒன்றிய கவுன்சிலருக்கு சுயேட்சை வேட்பாளர் தீப்பெட்டி சின்னத்தில் ஆனந்த கண்ணன், இரட்டை இலை சின்னத்தில் அர்ச்சுனன், உதயசூரியன் சின்னத்தில் இளையராஜா, ராந்தல் விளக்கு சின்னத்தில் வேல்முருகன், குடிநீர் குழாய் சின்னத்தில் அம்பேத்கர், தென்னை மரம் சின்னத்தில் ராஜ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஆனந்த கண்ணன் 981 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அதிமுக வேட்பாளரான அர்ச்சுனன் 953 வாக்குகள் பெற்ற நிலையில், அவர் வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் ஆனந்த கண்ணன் மற்றும் மற்ற 5 வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகளிடம் விவரம் கேட்டபோது அவர்கள் சரிவர பதில் தர மறுத்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் மறு வாக்கு எண்ணிக்கை செய்ய வலியுறுத்தி வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, டிஎஸ்பி இளங்கோவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் ஆனந்த கண்ணன் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டு வெற்றி உறுதி செய்யப்பட்டது. 12 மணிக்கு முடிவுகள் வெளியாகி இரவு 8 மணி அளவில் அதன் உறுதியான முடிவை அறிவிப்பதற்கு காலம் எடுத்துக் கொண்டதால் மற்ற வாக்கு எண்ணிக்கைகள் அனைத்தும் தாமதமாகியது. இதனால் வேட்பாளர்களும், முகவர்களும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகினர்.

Related Stories: