கருப்பு அங்கியில் இருப்பதால் வக்கீல் உயிர் ஒன்றும் விலை மதிப்பற்றதல்ல: நிவாரணம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: கொரோனா பாதித்து உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கேட்டு தொடர்ந்த வழக்கில், ‘கருப்பு அங்கி அணிந்திருப்பதால் மட்டும் வக்கீல்களின் உயிர் மற்றவர்களைக் காட்டிலும் விலை மதிப்பில்லாத ஒன்றாகி விட முடியாது’ என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘கொரோனா நோய் தொற்றால் பாதித்து இறந்த சுமார் 60 வயதுக்கு குறைவாக வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து ஒன்றிய அரசு மற்றும் மாநில வழக்கறிஞர்கள் பார் அசோசியேஷன் ஆகியோருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘நாடு முழுவதும் ஏராளமான குடிமக்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். இதில் வழக்கறிஞர்களின் உயிர் என்பது மட்டும் மற்ற மனித உயிர்களை விட உயர்வானது ஒன்றும் கிடையாது. இதில் நீங்கள் கருப்பு அங்கி அணிந்து இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் உங்கள் வாழ்க்கை மற்றும் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது என்று அர்த்தம் கிடையாது. இது பொதுநல மனு போன்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களுக்கான விளப்பரத்தை தேடிக்கொள்வதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது போன்று இருக்கிறது. இதுபோன்று நீதிமன்றத்தின் நேரத்தை செலவழிக்ககூடிய வழக்குகளை தடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது வந்து விட்டது’’ என காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரான வழக்கறிஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்து முடித்து வைத்தனர்….

The post கருப்பு அங்கியில் இருப்பதால் வக்கீல் உயிர் ஒன்றும் விலை மதிப்பற்றதல்ல: நிவாரணம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: