வனதுர்க்கை அம்மன் சித்தர் பீடத்தில் குருபூஜை விழா கோலாகலம்

செய்யூர், டிச. 19: சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆட்டுப்பட்டி கோட்டைப்புஞ்சை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வனதுர்க்கையம்மன் சித்தர் பீடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தின் முதல்நாள் குருபூஜை விழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.  இந்நிலையில், இந்தாண்டு மார்கழி மாதத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் இக்கோயிலில் குருபூஜை விழாவானது கோலாகலமாக நடந்தது. இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை வனதுர்க்கை அம்மன், சிவலிங்கம், வனதுர்க்கை சித்தர் மற்றும் கோயில் சன்னதியில் உள்ள விநாயகர், கிராம தேவதைகள், முனீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மலர் அலங்காரங்கள் நடந்தன. தொடர்ந்து மாலை யாகபூஜை, கோபூஜை, மகா பூர்ணாஹுதி, தீபாராதனைகளும் நடந்தது. அதன்பின் கலச புறப்பாடு வன துர்க்கை அம்மன், சிவலிங்கம் மற்றும் வன துர்க்கை சித்தர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இந்த குருபூஜை விழாவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வனதுர்க்கை அம்மன் சிவன் மற்றும் சித்தர் ஆகியோரை வணங்கி சென்றனர். விழாவில், கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்காக கோயிலை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவ்விழா ஏற்பாட்டினை கோயில் நிர்வாகி வனதுர்க்கைதாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

Related Stories: