வேளாண்துறையில் ₹76 லட்சம் முறைகேடு

புதுச்சேரி, டிச. 16: வேளாண்துறையில் நடந்த ரூ.76 லட்சம் முறைகேடு புகாரில் 13 அதிகாரிகள் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை இனிமேல் அதுபோல் செய்ய வேண்டாமென நிர்வாகி அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் கூடுதல் வேளாண் இயக்குநர் (பயிற்சி வழி தொடர்பு திட்டம்) அலுவலகத்தில் கடந்த 2006, 2007 மற்றும் 2008ம் ஆண்டு நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.  முதலில் வேளாண்துறையும், அதன்பிறகு கணக்கு மற்றும் கருவூல இயக்குநரக அதிகாரிகள் மூலமாக தணிக்கை செய்யப்பட்டது. இதையடுத்து, அரசாங்க பணம்  ரூ.76 லட்சம் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இதற்கு காரணமான அதிகாரிகள் 13 பேரை  பட்டியலிட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமேன தெரிவிக்கப்பட்டது. அரசாங்க பணத்தை கையாளுவதில் மேலதிகாரிகள் பொறுப்புகளை தட்டிக்கழித்ததால் முறைகேடு நடக்க வாய்ப்பு இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களின் இன்சூரன்ஸ் மற்றும் வெளிக்கடன் போன்றவற்றை குறிப்பிட்ட நிறுவனத்தில் செலுத்தாததால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தலைமை செயலருக்கு புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக  விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, 2013ம் ஆண்டு 13 உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

(அப்போது 10 அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றுவிட்டனர்) இதனிடையே பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சுமார் 44 பேர் மீண்டும் தலைமை செயலரிடம் புகார் மனு அளித்தனர். அதில், பணம் தங்களுக்கு திருப்பிக்கிடைக்க ஆவண செய்யுமாறும்  கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு கொண்ட நிர்வாகி, ஓய்வு பெற்ற 10 உயரதிகாரிகளை தவிர்த்து,  தற்போது பணியில் உள்ள 3 உயரதிகாரிகளையும் தவறு செய்ய வேண்டாம் என்று எச்சரித்து விடுவித்ததாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனால் அரசுக்கும், ஊழியர்களுக்கும் ஏற்பட்ட ரூ.76 லட்சம் இழப்பீட்டுக்கு யாரும் பொறுப்பில்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பணத்தை பறிகொடுத்த மஸ்தூர், வாட்ச்மேன், டிரைவர், செயல்விளக்க உதவியாளர், கிராம விரிவாக்கப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கடைநிலை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஊழியர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிலும் குறிப்பாக விஜிலென்ஸ் அறிக்கை வந்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ேமலும், நிதி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை நிர்வாகி எச்சரித்து விடுவித்தது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது.

அரசுக்கு ஏற்பட்ட இழப்பை பரவாயில்லை என்று கூறினாலும் ஊழியர்களுக்கு ஏற்பட்ட ரூ.27 லட்சம் இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? என பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர். முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு சம்பளம் வழங்கியும், தங்களது கடமையை செய்ய தவறியவர்களுக்கு புதிய பதவியும் மற்றும் பதவி உயர்வும்  வழங்கியது எந்த வகையில் நியாயம் என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அதோடு அரசின் பணத்தை முறைகேடு செய்துவிட்டு, அதிகாரிகளாக இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்பதில் நியாயமில்லை. ஊழலற்ற வெளிப்படைத்தன்மை கொண்டிருப்பதாக கூறும் நிர்வாகியின் இந்த செயல்பாடு மிகவும் மோசமானது. இத்தகைய செயல்பாடு தவறுகளுக்கு துணை போகக்கூடியது என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

Related Stories: