மர்ம காய்ச்சலால் பாதித்த மக்களுக்கு 2வது நாளாக மருத்துவ குழுவினர் சிகிச்சை

சின்னசேலம், டிச. 16:  சின்னசேலம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடமாடும் மருத்துவ குழுவினர் இரண்டாவது நாளாக முகாமிட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வீ.மாமந்தூர் ஊராட்சி. இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள ராமசாமி, கருப்பாயி, செல்லம்மாள், அன்பு, காசியம்மாள், நதியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் மற்றும் கை, கால், மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளனர். பலர் நைனார்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் நடமாடும் மருத்துவ குழுவினருக்கு தகவல் அளித்ததன் பேரில்  சின்னசேலம் வட்டார நடமாடும் மருத்துவர் ஆர்த்தீஸ்வரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சார்லஸ்விக்டர், சந்திரன், சீனுவாசன், கவுதம் மற்றும் செவிலியர் மலர்கொடி, மஸ்தூர் பணியாளர்கள் நேற்றுமுன்தினம் இரவு வீ.மாமந்தூர் கிராமத்திற்கு சென்று மாத்திரை வழங்கினார்கள்.

பின்னர் நேற்று காலை நடமாடும் மருத்துவ அலுவலர் வந்தனா மற்றும் சந்திரன், சீனுவாசன், கவுதம் மற்றும் செவிலியர் மலர்கொடி மஸ்தூர் பணியாளர்கள் அந்த கிராமத்திற்கு இரண்டாவது நாளாக சென்று ரத்த பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். அதைப்போல நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடையே பேசிய மருத்துவர்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லை, காய்ச்சல் என்றால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தெருக்களை சுகாதாரமாக, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள். கடந்த 2 நாட்களாக மருத்துவ குழுவினரால் 100க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து மருத்துவ குழுவினருக்கு கிராம மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Related Stories: