×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போக்குவரத்து விதி மீறல் நாளுக்கு நாள் அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், டிச. 13: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போக்குவரத்து விதி மீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் சாலை விதியை முற்றிலுமாக மறந்து பொருட்களை ஏற்றும் வாகனங்களில் அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் அளவுக்கு அதிகமாகவும், உயரமாகவும் பாரங்களை ஏற்றிச் செல்கின்றனர்.

இதுபோன்ற செயல்களால் எதிர்பாராத விதமாக உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படுகிறது. கடந்த சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு உப்பூர் அருகே அதிகமான பாரம் ஏற்றிச் சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீ பற்றி எரிந்து லாரி சேதமடைந்ததோடு அந்த ஒட்டுனரும் உயிரிழந்தார். அதேபோல் ஆனந்தூர் பகுதியில் ஆடுகளை ஏற்றி வந்த லாரியில் மிக உயரமாக ஆடு அடைக்கும் கூண்டை ஏற்றி வந்த நிலையில் மின் கம்பியல் உரசி விபத்து ஏற்பட்டது. இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை  ஒட்டுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘சாலை விதிகள் என ஒன்று இருந்தும் பெரும்பாலனோர் அதனை கடைபிடிப்பதில்லை. போலீசாரும் சோதனையின்போது பெரும்பாலும் ஹெல்ெமட் அணியாதவர்களை கண்காணிக்கும் அளவுக்கு, அதிக பாரம் ஏற்றி செல்வது, குட்டி யானை என்று சொல்லக் கூடிய டாடா ஏஜி போன்ற வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்பவர்களையும் கண்டுகொள்வதில்லை. அதே போல் சிறு, சிறு பசங்கள் டூவீலர் ஒட்டுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் விபத்து அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விலை மதிப்பெற்ற உயிர்கள் ஒரு நொடியில் போய் விடும் வாய்ப்புள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விபத்து இல்லா பகுதியாக நமது பகுதியை பாதுகாக்க உதவ வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை