×

ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

சாயல்குடி, டிச. 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி ராமநாதபுரத்தில் அரசு அலுவலர்கள், அச்சக உரிமையாளர்கள், அரசு கட்சியினர் ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவராவ் தலைமையில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கலெக்டர் வீரராகவராவ் கூறும்போது, ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 3691 பதவியிடங்கள் நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒரு மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 429 பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்கள், 3075 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன.

இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், திருவாடனை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 81 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 168 கிராம ஊராட்சி தலைவர், 1290 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு டிசம்பர் 27ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 261 கிராம ஊராட்சி தலைவர்கள், 1785 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்களுக்கு டிச.30ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும். மாவட்டத்தில் உள்ள 1819 வாக்குச்சாவடி மையங்களில் முதல் கட்ட வாக்குபதிவில் 813 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 1006 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நான்கு விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்த உள்ளன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஊரக பகுதிகளில் 8 லட்சத்து 49 ஆயிரத்து 993 வாக்காளர்களில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 72 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 881 பெண் வாக்காளர்களும், 40 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 14 ஆயிரத்து 15 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 5386 வாக்கு பெட்டிகள் பயன்படுத்த உள்ளன. மாவட்டத்தில் 98 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களும், 26 மிகவும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை வாக்களிப்பின் முலம் பதிவு செய்ய வேண்டும்.  ஜனநாயக விரோத செயல்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது. மாவட்டத்தில் கடலாடி அருகே ஏனாதி உள்ளிட்ட சில கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் முறையில் தேர்வு செய்யவதாக தொலைபேசி புகார் வந்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதி வருவாய்துறை, காவல்துறை குழு அமைத்து விசாரணை நடந்து வருகிறது. செய்தி உண்மையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற மற்ற இடங்களில் ஏலம் முறையில் தேர்வு நடப்பது, நடந்தது கண்டறியப்பட்டால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் பொதுமக்கள் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுப்பது, வாங்குவது குற்றமாகும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிளக்ஸ் போர்டு தடை செய்யப்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்கள் தனியார் இடத்தில் உரிய அனுமதி பெற்று, தேர்தல் விதிமுறைப்படி விளம்பரம் செய்து கொள்ளலாம். மாவட்டத்திலுள்ள 11 யூனியனில் 3 யூனியன் பகுதிக்கு ஒரு பறக்கும் படை அமைத்து 24 மணிநேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என தெரிவித்தார்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...