×

பரமக்குடி பகுதியில் சேதமடைந்த அரசு பஸ்கள் இயக்கம்

பரமக்குடி, டிச. 13: பரமக்குடி பகுதியில் கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் படு மோசமாக உள்ளதால் பயணம் செய்யும் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பரமக்குடி நகரின் வளர்ச்சிகள் முழுவதும் அதனை சுற்றியுள்ள கிராமத்தின் அடிப்படையாக கொண்டுதான் நடைபெற்று வருகிறது. ஆனால் பரமக்குடியைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் வசதிகள் இல்லாமல் உள்ளது. அதைப்போல் இயக்கப்படும் அரசு பஸ்கள் படுமோசமாக உள்ளன. பஸ்களில் உள்ள கண்ணாடிகள்  உடைந்து பாதுகாப்பு இல்லாத சூழல் உருகியுள்ளது. பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் ஆட்டம் கண்டுவிட்டது. மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது, பயணிகள் தூக்கி வீசப்படுகின்றனர். இது தவிர டீசலை சிக்கனப்படுத்த வேகத்தை குறைத்து செல்கின்றனர்.

ஆனால் ஒரு வேலை வேகத்தை அதிகப்படுத்தினால், பயணிகள் யாரும் இருக்கையில் உட்கார முடியாத நிலையில் இருக்கைகள் மற்றும் பஸ்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் பயணிகள் அரசு பஸ்களில் செல்லவே அச்சப்படுகின்றனர். அதைபோல் கிராமங்களுக்கு செல்லும் பஸ்களில் போதுமான பிரேக் இல்லாமல் அதிகமாக விபத்து நடப்பதாக பஸ் டிரைவர்களே சொல்லுவது பொதுமக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கிராம சாலைகள் வளைந்து நெளிந்து செல்வதாகவும், மேடு பள்ளமாகவும் உள்ளதால், கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களில் சேதமடைந்த பகுதிகளை மாற்றி, முறையான பராமரிப்புடன் இயக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சத்திரக்குடி ராஜா கூறுகையில், ‘அரசு பஸ்களில் பயணம் செய்வது உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எந்த நேரத்தில் உடைந்து விழும் என்ற பயத்தில் பயணம் செய்யவதால் பஸ்ஸை விட்டு இறங்கும் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டு, பயணம் செய்ய வேண்டியுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பஸ்களை இயக்காமல் இருப்பது நல்லது’ என்றார்.

Tags : Paramakudi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்