வெலிங்டன் தேக்கத்தில் நீர் கசிவு கரைக்கு எந்த ஆபத்தும் இல்லை

திட்டக்குடி, டிச. 12: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், திட்டக்குடி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மேலும் வாக்குச்சீட்டுகள், வாக்கு பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அவற்றை பாதுகாப்பாக எடுத்து வந்து வைப்பதற்காக 14 இடங்களை தேர்வு செய்துள்ளோம். தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை பாதுகாப்பான இடங்களாக எந்த அளவிற்கு இருக்கும் என திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தேன். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 6 ஆயிரத்து 40 பதவிகளுக்கு தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம்.      வெலிங்டன் நீர் தேக்கத்தில் லேசான நீர் கசிவு இருப்பதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேதனை இருப்பதாக கேள்வி எழுந்தபோது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் அழைத்து கலந்தாய்வு செய்தேன். இத்தகைய நீர் கசிவு வழக்கமாக ஏற்படும் ஒன்றுதான், இதுகுறித்து விவசாயிகளும் பொது மக்களும் அச்சப்பட தேவையில்லை. சாதாரணமாக வெலிங்டன் நீர் தேக்கத்தில் 5ல் ஒரு பங்கு மட்டுமே நீர் பிடிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் நீர் தேக்கத்தில் கரையையொட்டி நீர் இருப்பதால் கசிவு ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான். குறிப்பிட்ட அளவில் மட்டும் கசிவு உள்ளது. இதற்கு மேல் அதிக அளவில் கசிவு இருந்தால் மட்டுமே கரையை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கரைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றார்.

Related Stories: