×

3 வருடமாக தண்ணீருக்காக கலெக்டர் முதல் முதல்வர் வரையிலும் கோரிக்கை மனு கொடுத்தும் பயனில்லை விரக்தியில் சேனத்திகோட்டை கிராமமக்கள்

தொண்டி, டிச.10: சேனத்திகோட்டை கிராமத்தில் கடந்த மூன்று வருடங்களாக குடிநீர் வினியோகம் இல்லாமல் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடம் ரூ.10க்கு வாங்கும் அவல நிலையில் உள்ளனர். ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட சேனத்திகோட்டை, கானாட்டாங்குடி உள்ளிட்ட சில கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடி நீர் திட்டத்தின் கீழ் குடி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரையிலும் இப்பகுதிக்கு தண்ணீர் வினியோகம் இல்லை. இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவது அல்லது டேங்கர் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது என உள்ளனர். ஊராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. மாவட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக இப்பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த தமயந்தி கூறியது, மூன்று வருடமாக குடிதண்ணீர் வரவில்லை. தினமும் ஊராட்சி மன்றத்தில் கூறுகிறோம். எவ்வித நடவடிக்கையும் இல்லை. குடம் 10 ருபாய்க்கு வாங்குகிறோம். நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் வரையிலும் தண்ணீருக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏன் எங்களை புறக்கணிக்கின்றனர் என்றே தெரிவில்லை என்றார். முத்துகுமார் கூறியது, தண்ணீர் பிரச்னை குறித்து கலெக்டர் முதல் முதல்வர் வரையிலும் மனு கொடுத்து விட்டோம். மூன்று வருடமாக எவ்வித நடவடிக்கையும் இல்லை. டேங்கர் தண்ணீருக்காக தவம் கிடப்பதும், அதிக பொருள் செலவு செய்வதும் வாடிக்கையாகி விட்டது. காவிரி குழாய் உடைந்து இருந்த இடம் கூட தெரியாமல் போய் விட்டது. மின்சாரம், சாலை வசதி என எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : Senattikottai ,Chief Minister ,Collector ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...