பெட்ரோல் குண்டு வீசி இரட்டை கொலை வழக்கு தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, டிச.9: சூளகிரி அருகே பெட்ரோல் குண்டு வீசி பெண் உள்பட 2 பேரை கொலை செய்த வழக்கில், மதுரை கூலிப்படையை சேர்ந்த வாலிபர் மற்றும் அவருக்கு உதவிய சூளகிரியை சேர்ந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி-ஓசூர் சாலையில் சானமாவு என்ற இடத்தில், கடந்த மாதம் 11ம் தேதி, கார் மீது லாரியை மோதி, பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கார் டிரைவர் முரளி உடல் கருகி பலியானார். காரில் பயணம் செய்த ஓசூரை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்தபாபுவின் மனைவி நீலிமா(42), சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக, உத்தனப்பள்ளி போலீசார் நடத்திய விசாரணையில், ஆனந்த்பாபுவின் அக்கா கணவரான ஓசூரை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி, தொழில் போட்டி காரணமாக கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுரையை சேர்ந்த லாரி உரிமையாளர் நீலமேகம், லாரி டிரைவர் மகராஜன், ஓசூரை சேர்ந்த ஆனந்தன், சாந்தகுமார், அசோக், சூளகிரி கோபசந்திரம் ராமு, மஞ்சுநாத், கோபால் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே மதுரையை சேர்ந்த வக்கீல் வெங்கட்ராமன் சேலம் நீதிமன்றத்திலும், அம்பலவாணன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரும், தேனி பெரியகுளம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்கள் 11 பேரும், தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த இரட்டை கொலை தொடர்பாக, மதுரை கூடல்புதூரை சேர்ந்த கருப்பையா மகன் புல்லட் ஜாக்கி(எ)பாலாஜி(31), சூளகிரி காமன்தொட்டியை சேர்ந்த முருகன்(50) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் புல்லட் ஜாக்கி கூலிப்படையை சேர்ந்தவர். முருகன் ஓசூர் தொழிலதிபர் ராமமூர்த்தியிடம் நீண்ட காலமாக வேலை செய்து வந்தவர். இவர் கூலிப்படையை ஓசூருக்கு வரவழைத்தது, அவர்களை தங்க வைத்து, பணம், சிம்கார்டு, செல்போன்கள் வாங்கி கொடுத்தது போன்ற வேலைகளை செய்துள்ளார். கைதான 2 பேரையும், போலீசார் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ஓசூரை சேர்ந்த தொழிலதிபரான ராமமூர்த்தியை, போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: