கிருஷ்ணகிரி அணையின் மதகுகளை மாற்ற ₹19 கோடியில் ஒப்பந்தம்

கிருஷ்ணகிரி, டிச.9: கிருஷ்ணகிரி அணையின் 7 மதகுகளை மாற்ற, ₹19.07 கோடி மதிப்பில் திருச்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மதகுகளை மாற்றும் பணி 2020 வரை நடப்பதால், இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் அணையின் பிரதான முதல் மதகு, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி உடைந்தது. இதனால், அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 10 அடி தண்ணீர் வீணானது. இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, ₹3 கோடி மதிப்பில்  உடைந்த மதகிற்கு பதிலாக புதிய மதகு பொருத்தப்பட்டது. ஆனால், மற்ற 7 மதகுகளும் இதே போன்று சேதமாகி இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, அன்று முதல் அணையின் மொத்த உயரமான 52 அடியில் 42 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் அணைத்தும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. எனவே, அணையின் மொத்த உயரத்திற்கும் தண்ணீரை தேக்கி வைக்க, மற்ற 7 மதகுகளையும் மாற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 7 மதகுகளையும் மாற்றி அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் 7 மதகுகளையும் மாற்ற நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 6ம் தேதி வரை டெண்டர் கோரப்பட்டது. இந்நிலையில், திருச்சி குவாலிட்டி ஷட்டர் நிறுவனத்துடன், ஜிஎஸ்டி உட்பட ₹19 கோடியே 7 லட்சம் மதிப்பில், 7 மதகுகளையும் மாற்ற ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், புதிய மதகை தயாரிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது. ஒவ்வொரு மதகையும் 6 பாகங்களாக தயார் செய்து, அணைக்கு கொண்டு வந்து இரண்டு, இரண்டு மதகுகளாக பொருத்த உள்ளனர். முன்னதாக வரும் ஜனவரி மாதம், அணையின் நீர்மட்டத்தை 32 அடியாக குறைத்து, 7 மதகையும் வெட்டி அகற்றும் பணி 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. இதற்கு விவசாயிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றனர்.

Related Stories: