தாராபுரம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு

தாராபுரம், டிச.5:  தாராபுரம் அருகே அரசு பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது ெசய்துள்ளனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காராணமான ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த போராட்டத்தில்  கலந்து கொண்ட தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனையும் போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து தாராபுரத்தில் பைபாஸில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி  பாலசுப்பிரமணியம் நகரை சேர்ந்த ஒண்டிவீரன் (50), சூரியநல்லூரைச்  சேர்ந்த வடிவேல்(36) அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார்(21) ஆகியோர், நேற்று முன்தினம் கல் வீசினர். இதில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து பஸ்சில் பயணித்த மணிகண்டன்(20), ஹரி(21), ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். பின்னர் இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தாராபுரம் போலீசார் ஒண்டிவீரன், வடிவேல், நவீன்குமார் ஆகிய  3 பேரையும் கைது  செய்தனர். பின் மூவரையும் தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில்  அடைத்தனர்.

Related Stories:

>