நாமகிரிப்பேட்டையில் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டை, நவ.27: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, நேற்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையத்தில், நேற்று தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு  மையம் சார்பில், தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் இளங்கோ கலந்து கொண்டார்.  மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரன்  வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் சாக்கடை கால்வாய், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தான் முக்கிய காரணம். எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிட்டனர். இதில், மாநில இணை செயலாளர் சிவலிங்கம், முன்னாள் கவுன்சிலர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: