×

நலிந்து வரும் வெற்றிலை விவசாயம்

திருப்புவனம், நவ.22: திருப்புவனத்தில் வெற்றிலை விவசாயம் நலிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திருப்புவனம் பகுதியில் வெற்றிலைக் கொடிக்கால் விவசாயம் மிகவும் பிரபலமாக இருந்தது. திருப்புவனத்திலிருந்து காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மதுரை, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் வெற்றிலை கொண்டு செல்லப்பட்டது. திருப்புவனம் பகுதியில் வெற்றிலை சாகுபடியில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் ஈடுபட்டிருந்தனர். சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொடிக்கால் விவசாயம் நடந்து வந்தது. வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகளுக்கென இரண்டு சங்கங்கள் தனித்தனியாக இயங்கி வந்தன. வெற்றிலை கொடிக்கால் சாகுபடியில் அகத்திமரமே பிரதானமாகும். முதலில் அகத்தி விதைத்து செடியாகி மரமாகும் பருவத்தில்தான் வெற்றிலை கொடி நடவேண்டும். அகத்திமரத்தில்தான் வெற்றிலை கொடி படரும். நாட்டு வெற்றிலை, கற்பூரம் போன்ற வெற்றிலைகளில் பல்வேறு வகையான மூலிகை குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெற்றிலை பயன்பாடு குறைந்து வருகிறது. தெருத்தெருவுக்கு வெற்றிலை பாக்கு கடைகள் இருந்து வந்த நிலை மாறிவிட்டது. இதனால் வெற்றிலை மகசூல் அதிகரித்து வருகின்ற நிலையில் போதுமான விலை கிடைக்கவில்லை. வெற்றிலையை பறிக்காமல் கொடியிலேயே விட்டு விடும் அவல நிலை இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கொடிக்கால் விவசாயி சோணைமுத்து கூறுகையில், வெற்றிலை கல்யாண வீடு, விசேச வீடுகளில் தாம்பூலத்தில் முக்கியமான அம்சமாகும். திருப்புவனம் பகுதியில் அகத்திக்கீரையும் வெற்றிலையும் மிகவும் பிரபலமானதாகும். ஆனால் அந்த வெற்றிலையை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலை மிகவும் அவலத்துக்குரியதாக உள்ளது. வெற்றிலைக் கொடிக்கால் விவசாயத்தில் ஈடுபடுவோர் நிலமற்ற விவசாயிகள் தான். மூன்று வருட சாகுபடிப் பயிரான கொடிக்கால் விவசாயத்தை குத்தகை அடிப்படையில் தான் சாகுபடி செய்கிறோம். இதனால் வங்கிகளில் கடன் வழங்கப்படுவதில்லை. தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையின் கீழ் வரும் வெற்றிலைக்கு காப்பீடு திட்டத்திலும் சேர்க்கப்படுவதில்லை. முப்பது வகையான மூலிகை குணம் கொண்ட வெற்றிலை குறிப்பாக செரிமானத்தை அதிகரிக்க வைக்கிறது. வெற்றிலை பாக்கு போடுவதால் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. புகையிலை, பான்பராக், குட்கா போன்றவை போடுவதால் தான் புற்று நோய் ஏற்படுகிறது. ஆனால் ஆங்கில மருத்துவர்கள் வெற்றிலை போட்டால் கேன்சர் வரும் எனக்கூறுவதால் மக்கள் வெற்றிலை பயன்பாட்டை குறைத்து வருகின்றனர். இதனால் வெற்றிலை விவசாயம் நலிந்து வருகிறது. வெற்றிலை பறிக்கும் தொழிலாளிக்கு ஒரு கிலோவுக்கு இருபது ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டு கிலோ ரூ.140 வரை விற்பனையான வெற்றிலை தற்போது அந்த அளவுக்கு விலையில்லை. வெற்றிலை பறிக்கும் கூலி கொடுக்க முடியாத நிலையில் வெற்றிலையை பறிக்காமல் கொடியிலேயே விட்டு விடும் அவலத்தில் இருக்கிறோம் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை