×

பாதாள சாக்கடை பணிக்கு தீர்த்தக்குளங்கள், நீர்த்தேக்கத்தை சேதப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு

ராமேஸ்வரம். நவ. 12:  ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணி என்ற பெயரில் மக்கள், கால்நடைகளின் நீராதாரங்களாக விளங்கி வரும் தீர்த்தக்குளங்கள், நீர்த்தேக்கத்தை சேதப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிலத்தில் பதிப்பதற்கு கொண்டுவரப்பட்ட குழாய்கள் ஊழியர்களால் திரும்ப கொண்டு செல்லப்பட்டது. ராமேஸ்வரம் நகர் பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. நகரிலுள்ள நெடுஞ்சாலைகள் தவிர்த்து நகராட்சி சாலைகள் அமைந்துள்ள பகுதியில் நிலத்தில் மணலை அகழ்வு செய்து குழாய்கள் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரம் நகரையொட்டி அமைந்துள்ள ஓலைக்குடா கடற்கரை கிராமப்பகுதியில் சில நாட்களாக நிலத்திற்கும் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் இப்பகுதியில் அமைந்துள்ள பழமையான அறிவுநாச்சி தீர்த்தக்குளத்தை குழாய் பதிப்பதற்காக ஜேசிபி இயந்திரத்தினால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

புனித தீர்த்தமாகவும், இப்பகுதி மக்களின் நீராதாரமாகவும் விளங்கி வந்த பழமையான இக்குளத்தை சீரமைத்து பராமரிப்பு செய்வதற்கு குளத்தை சுற்றிலும் கல்வேலி அமைத்ததுடன், ரூ பல லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் எந்த அறிவிப்பும் செய்யாமல் தீர்த்தம் வழியாக பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக ஊழியர்கள் குளத்தை உடைத்து சீரழித்துள்ளனர். பாதாளசாக்கடை திட்ட பணியாளர்களின் இச்செயல் பொதுமக்கள், பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று ஓலைக்குடா பகுதியில் அமைந்துள்ள மற்றொரு தீர்த்தமான நாரண தீர்த்தக் குளத்திற்கு அருகிலுள்ள நீர்த்தேக்க பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக ஊழியர்கள் குழாய்களை கொண்டு சென்றனர். ஓலைக்குடா கடற்கரை கிராமத்தில் பல இடங்களில் உப்புத்தண்ணீர் மட்டுமே இருக்கின்ற நிலையில் பழமையான நாரண தீர்த்தகுளமும், இதன் அருகிலுள்ள நீர்த்தேக்கமும் நன்னீர் ஆதாரங்களாக விளங்கி வருகிறது.

இப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளின் நீராதாரமாக விளங்கி வரும் நீர்த்தேக்கப் பகுதியில் மணலை தோண்டி குழாய் பதிப்பதற்காக ஊழியர்கள் குழாயுடன் வந்ததால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் குழாயுடன் வந்த வாகனத்தை வழிமறித்து ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். நேரம் செல்லச் செல்ல தகவல் தெரிந்து கிராமத்திலுள்ள அனைவரும் அங்கு வரத்துவங்கியதால் குழாய் பதிக்க வந்த ஊழியர்கள் வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டனர். ஓலைக்குடா பகுதியில் அறியநாச்சி, நாரண, நாரணிய என்ற பெயர்களில் மூன்று பழமையான தீர்த்தக்குளங்கள் உள்ளது. தொன்றுதொட்டு பக்தர்கள் இக்குளங்களில் தீர்த்தமாடி வந்த நிலையில், இக்குளங்களில் நல்ல தண்ணீராக இருப்பதால் தற்போது இப்பகுதி மக்களின் நீராதாரமாக இவை விளங்கி வருவதால் தீர்த்தக்குளங்கள், நீர்த்தேக்கத்துக்கு சேதம் ஏற்படாமல் வேறு பகுதியில் பாதாளசாக்கடை திட்ட குழாய் பதிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED ரோட்டில் பாய்ந்த சாக்கடை கழிவு நீரால் மக்கள் அவதி