×

மீனவ குடும்பங்களுக்கு உதவித்தொகை நிறுத்தம்

சாயல்குடி, நவ. 12:  பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், மீண்டும் வழங்கக்கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாட்டில் மீனவ குடும்பத்தலைவர், மீனவர், மீனவ மகளிர் கூட்டுறவு வங்க உறுப்பினர், மீன்பிடித்தல், மீன் பதனிடுதல், மீன் விற்பனையாளர், வலை பின்னுபவர், பழுது பார்ப்போர் உள்ளிட்ட மீன்பிடி தொழில் சார்ந்த வேலை செய்யும் குடும்பத்தை சேர்ந்தவருக்கு மீன்பிடி குறைவு கால சிறப்பு நிதியாக ரூ.4 ஆயிரம் கடந்த 2011ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரண திட்ட நிதியை கணவன், மனைவி இணைந்து தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2018 முதல் தமிழக அரசு உதவி தொகையை ரூ.4ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வந்துள்ளது. தற்போது நடப்பு ஆண்டிற்கான உதவிதொகை பெற விரும்புவோர் மீன்வளத்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்க மீன்வளத்துறை மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மீனவ குடும்ப உறுப்பினர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பித்த பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவி தொகை வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் உதவித்தொகை கிடைக்காமல் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. எனவே உடனடியாக உதவிதொகையை வழங்க கோரி நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெரியபட்டிணத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மனு அளித்தனர். பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தலைவி தில்சாத்பேகம் கூறும்போது, மீன்பிடி குறைவு காலத்தில், மீனவ குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிதொகை ரூ.5 ஆயிரம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவியாக இருந்து வந்தது. இந்தாண்டிற்கான உதவி பெற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க சொன்னார்கள் விண்ணப்பித்தோம். ஆனால் உதவி தொகை கிடைக்க வில்லை. பலமுறை வங்கி கணக்கை சரி பார்த்தும் வரவில்லை. இது ஏமாற்றத்தை தருகிறது. உதவித்தொகை கிடைக்காததால் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. 2011 முதல் வழங்கப்பட்டு வந்த உதவி தொகை தற்போது மட்டும் ஏன் வழங்கவில்லை என காரணம் தெரியவில்லை. எனவே கலெக்டர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : fishing families ,
× RELATED தொடரும் இலங்கை கடற்படையினரின்...