ஆரோவில் அருகே தெருநாய்கள் கடித்ததால் புள்ளிமான் பலி

வானூர்,  நவ. 8: வானூர் தாலுகா ஆரோவில் அருகே மாத்தூர் கிராமத்தில் சுற்றித்திரிந்த  புள்ளி மானை தெரு நாய்கள் கடித்ததில் பரிதாபமாக இறந்தது. வானூரை அடுத்த  ஆரோவில் பகுதியில் உள்ள காடுகளில் மான்கள் மற்றும் மயில்கள் அதிகளவில்  உள்ளன. இவை அவ்வப்போது அருகில் உள்ள கிராம பகுதிகளில் தண்ணீருக்காக வந்து  செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மாத்தூர்  கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பில் 2 வயதுடைய புள்ளி மான் ஒன்று இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு  தகவல் தெரிவித்தனர்.  சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல்  கொடுக்கப்பட்டது. அவர்கள் திண்டிவனம் வன அலுவலகத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் முருகானந்தம், வனவர்கள்  அருள்ராஜ், முரளிகிருஷ்ணன், வனக்காப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மானை மீட்டு, கிளியனூர் கால்நடை மருத்துவர்  சிவப்பிரகாசத்தை அழைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது நாய்கள்  கடித்ததால்தான் புள்ளி மான் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து  அதனை மரக்காணம் அருகே அகரம் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் புதைத்தனர்.

Related Stories: