முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பூட்டியே கிடக்கும் கிராமப்புற நூலகங்கள்

சாயல்குடி, நவ. 8: முதுகுளத்தூர் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளின் கிராமபுற நூலகங்கள் பூட்டியே கிடப்பதால், படிக்க முடியாமல் இளைஞர்கள், மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். முதுகுளத்தூர் ஒன்றியத்திலுள்ள 48 ஊராட்சி மன்றங்களுக்கு, கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010 வரை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் கிராம நூலகங்கள் திறக்கப்பட்டது. நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் உள்ளிட்டவை சுமார் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. நூலகத்தை பராமரிக்க கிளை நூலகர் நியமிக்கபடாததாலும், சில இடங்களில் நியமிக்கப்பட்ட நூலகர், நூலகத்திற்கு வராததாலும், அனைத்து நூலகங்களும் பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது,  அங்கிருந்த சேர், டேபிள் உள்ளிட்ட தளவாட சாமான்கள் மாயமாகி உள்ளது, பெரும்பாலன புத்தகங்களும் மாயமாகிவிட்டது.

இதனால் கிராமங்களிலுள்ள நூலக கட்டிடங்கள் சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால் பொது அறிவு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் நாளிதழ்கள், புத்தகங்களை பயன்படுத்த  குறைந்தது சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் முதுகுளத்தூர் தாலுகா தலைமையிட நூலகத்திற்கு செல்லும் நிலை உள்ளதாக கூறுகின்றனர். எனவே கிராமங்களில் சிதிலமடைந்த நூலகங்களை பராமரித்து, புதிய புத்தகங்களை வழங்கி, நூலகத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகுளத்தூர் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : libraries ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து...