ரூ.5 கோடி மதிப்பிலான நகையை திரும்ப வழங்க கோரி விவசாயிகள், பெண்கள் காத்திருப்பு போராட்டம்

உளுந்தூர்பேட்டை,  நவ. 7: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் திருநாவலூர் மற்றும் சுற்றியுள்ள  கிராமங்களை சேர்ந்த 497 விவசாயிகள் தங்களது வேளாண்மை பணிக்காக 1790 பவுன்  நகையினை அடகு வைத்து இருந்தனர். இந்த நகைகள் அனைத்தும் கடந்த 10  ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போனது. இதுவரை அந்த நகைகளை பாதிக்கப்பட்ட  விவசாயிகள் தங்களுக்கு திரும்ப வழங்க கோரி பொதுமக்கள், அரசியல் கட்சிகளின்  சார்பில் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்  விவசாயிகளுக்கு ரூ 5 கோடி மதிப்பிலான அடகு வைத்த நகைகளை திரும்ப  வழங்காததால் நேற்று மீண்டும் திருநாவலூர் கூட்டுறவு வங்கியின் முன்பு திரண்டு  நகைகளை அடகு வைத்து விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாநில துணை தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி மற்றும்  நிர்வாகிகள் ஏழுமலை, தாண்டவராயன், ஜெயக்குமார், ரகுராமன் மற்றும்  50க்கும்  மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் ரூ 5 கோடி மதிப்பிலான  நகையினை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி  காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கியின் முன்பு பரபரப்பு  ஏற்பட்டது.

இதையடுத்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயக்குமார் தலைமையில் 50க்கும்  மேற்பட்ட போலீசார் வங்கியின் முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை தாசில்தார் வேல்முருகன், டிஎஸ்பி விஜயக்குமார்  மற்றும் வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க  நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், இதில் எந்தவித  முடிவுகளும் எட்டப்படாததால் தொடர்ந்து இரவு நேரத்திலும் வங்கியின் முன்பு  காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டுறவு வங்கியில்  அடகு வைத்த ரூ 5 கோடி மதிப்பிலான நகையினை திரும்ப தரக்கோரி விவசாயிகள்  மற்றும் பொதுமக்கள் வங்கியின் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை

ஏற்படுத்தி  உள்ளது.

Related Stories: