காரைக்குடியில் மழைக்கு ஒழுகும் அரசு பேருந்துகள்

காரைக்குடி, நவ.6: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் பயணம் செய்ய லாயக்கற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் புலம்பி வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சிவகங்கை, ராமநாதபுரம் என இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுகிறது. இக்கோட்டத்துக்கு உட்பட்ட 11 கிளைகளில் இருந்து 700 பஸ்கள் இயக்கப்படுகிறது.  இதில் நகர பஸ்கள் 280,  மொபசல் பஸ்கள் 420.  தவிர இக் கோட்டத்தில் இருந்து கோவை, ஈரோடு, விழுப்புரம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறன. காரைக்குடி கிளையில் இருந்து  68 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் நகரபஸ்கள் 24, மொபசல் பஸ்கள்  44ம் இயக்கப்படுகிறது. இக்கிளையில் இருந்து  திருச்சி, மதுரை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, கோவை, ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் இயக்கப்படுகிறது.  காரைக்குடி கிளையில் இயங்ககூடிய பஸ்கள் தவிர சிவகங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய கிளைகளில் இயக்கப்படும் நகர, மொபசல் பஸ்கள் மிகவும் பழையதாகவும் கடகட சத்துடனும்தான் செல்கின்றன. இதனால்  பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. விபத்து ஏற்பட்ட பஸ்களை முறையாக பழுதுபார்க்காமல் ஆங்காங்கே சிறுவேலை பார்த்த நிலையிலும், உரிய பராமரிப்பு இன்றியும் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்சில் உள்ள சீட்டுகள், ஜன்னல் மற்றும் மேற்கூரை மிகவும் மோசமாக உள்ளது.  மழை நேரங்களில் ஒருசில பஸ்களில் உள்ளே ஒழுகுகிறது.

சென்னை, கோவை, ஈரோடு போன்ற அதிகதூரம் செல்லும் பஸ்களுக்கு மட்டும் ஸ்டெப்பினி உள்ளது. மற்ற பஸ்களுக்கு  ஸ்டெப்பினி இல்லை. இதனால் பஸ் செல்லும் வழியில் பஞ்சர் ஆனால்,  அருகே உள்ள  டெப்போவில் இருந்து மெக்கானிக் வந்து டயரை மாற்றும் வரை பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. அதேபோல் இங்கிருந்து மதுரை, திருச்சி உட்பட பகுதிக்கு செல்லும் பஸ்களின் நிலையும் பரிதாபமாக உள்ளது. மதுரை செல்ல 2 மணிநேரம் என்றால் அரசு பஸ்சில் செல்ல  3 மணிநேரம் ஆகிறது. இந்த 3 மணிநேரமும் சத்தத்துடன் தான் பயணிக்க வேண்டி உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், இக்கோட்டத்தில் 60க்கும் மேற்பட்ட பஸ்கள் டயர் இல்லாமல் உள்ளது.  ஒரு பஸ்சுக்கு நடத்துனர், ஓட்டுனர் ஆகியோருடன் சேர்த்து 7.5 சதவீத பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் 5 சதவீதம் மட்டும் உள்ளனர். டெக்னிக்கல் பிரிவு மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் ஆள் பற்றாக்குறை உள்ளது. இப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் 15 வருடங்களுக்கு மேலாக நிரப்பப்படவில்லை. பணிஓய்வு பெற்றவர்கள் பணியின் போது இறந்தவர்களின் இடங்களுக்கு இதுவரை பணிநியமனம் செய்யப்படவில்லை. இதனால் வேலை பளு கூடி உள்ளது. வாகனங்களை போதிய பராமரிப்பு செய்ய முடியவில்லை . பஸ்களில் பழுதடைந்த ஸ்பேர் பார்ட்ஸ்களை மாற்றுவது இல்லை. பழைய ஸ்பேர் பார்ட்ஸ்களையே பழுதுபார்த்து மீண்டும் மாட்டிவிடுகின்றனர் என்றனர்.

Related Stories: