பணி நிரந்தரம் செய்யக் கோரி மறியல் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது

ஊட்டி, நவ. 6: மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஊட்டியில் மறியிலில் ஈடுபட முயன்ற 36 பேர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் பேர் ஒப்பந்த ஊழியர்களாக மின் வாரியத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத நிலையில், பலர் ஒப்பந்த ஊழியர்களாகவே ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு அரசின் எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை. அதேபோல், சிலர் பணியில் இருக்கும் போதே உயிரிழந்தாலும், அவர்களுக்கு வாரிசு வேலை உட்பட எந்த ஒரு பயனும் கிடைப்பதில்லை. இந்நிலையில், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

ஊட்டியில் ஆவின் வளாகத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராமன் தலைமை வகித்தார். செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 1998க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்கிட வேண்டும். 2008க்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்கிட வேண்டும். 2008க்கு பின் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு கேங் மேன் பதவியில் தேர்வுகள் இல்லாமல் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி-குன்னூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால், அதற்குள் அவர்களை போலீசார் கைது செய்தனர். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று ஊட்டியில் நடந்த போராட்டத்தில் 36 ஒப்பந்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: