குஜிலியம்பாறை வசந்தகதிர்பாளையத்தில் பலி வாங்க காத்திருக்கும் பயன்பாடில்லாத கிணறு

குஜிலியம்பாறை, நவ. 1: குஜிலியம்பாறை அருகே வசந்தகதிர்பாளையத்தில் பயன்பாடில்லாத திறந்தவெளி கிணற்றால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறை ஒன்றியம், கோட்டாநத்தம் ஊராட்சிக்குட்பட்டது வசந்தகதிர்பாளையம். இங்கு 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவைக்காக நான்கு கிணறுகள் உள்ளது. ஆனால் இப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வற்றி, தற்போது கிணறுகள் நீர்வரத்து இல்லாமல் பயன்பாடின்றி உள்ளது. மழைகாலங்களில் அவ்வப்போது பெய்யும் மழைநீர் மட்டுமே இந்த கிணறுகளில் சிறிதளவு கிடக்கிறது. இங்குள்ள காளியம்மன் கோயில் அருகே தரைமட்டத்தில் ஒரு கிணறு உள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இந்த திறந்தவெளி கிணற்றால் இப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே இந்த கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை கூறுகையில், ‘வசந்தகதிர்பாளையம் காளியம்மன் கோயில் திருவிழா நாட்களில் கரகம் பாலிப்பதற்காக மட்டுமே இக்கிணற்றை பயன்படுத்துகின்றனர். பிற நாட்களில் முழுவதும் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. இப்பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது திறந்தவெளி கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியாவது அவ்வப்போது நடக்கிறது. இதுமட்டுமன்றி வெளியூரில் இருந்து இவ்வழித்தடம் வழியே இரவு நேரத்தில் டூவீலரில் வருவோருக்கு விபத்து அபாயம் உள்ளது. மேலும் இக்கிணறு அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. எனவே மனித உயிர்பலி நடக்கும் முன் இக்கிணற்றை சுற்றி பாதுகாப்பாக தடுப்பு வேலி அமைத்து, மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ என்றார்.

Related Stories: