ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தல்

தியாகதுருகம், அக். 31 : தியாகதுருகம்  குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் பயன்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடும்படி வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மணப்பாறை நடுகாட்டுப்பட்டி சம்பவத்தை தொடர்ந்து விழுப்புரம்  மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர்  உத்தரவிட்டார். அதன்படி தியாகதுருகம் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளான திம்மலை, வாழவந்தான்குப்பம், புக்குளம், வடதொரடலூர், உள்ளிட்ட  கிராமங்களில் வருவாய் ஆலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

அதில், விளைநிலங்களில் 30க்கும்  மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விவசாயிகள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இந்த ஆழ்துளை கிணறுகளை  அமைத்திருந்தனர். ஆனால் அவை பயன்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. எனவே இதுபோன்ற பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடி  போட்டு மூடும்படி விவசாயிகளிடம் வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தினர். மேலும் அனைத்து  கிராமங்களிலும் திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அதனை முறையாக  பராமரிப்பு செய்ய வேண்டும் எனவும், அதனை மழைநீர் தொட்டியாக மாற்ற பொதுமக்கள் முன் வர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: