பேருந்து படியில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் ஆபத்தான பயணம்

உளுந்தூர்பேட்டை,  அக். 31:   உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட  கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்  தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், பல்வேறு அத்தியாவசியப்  பணிகளுக்கும் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.  கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில்  உளுந்தூர்பேட்டைக்கு வந்து செல்லும் நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள  ஆசனூர், பாலி, ஷேக்உசேன்பேட்டை, எறஞ்சி, திருப்பெயர் உள்ளிட்ட 30க்கும்  மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய நேரத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால்  அந்த பேருந்துகளில் ஏராளமானவர்கள் படியில் தொங்கியபடி பயணம்  செய்யும் நிலை உள்ளது.

சில தனியார் பேருந்து களில் வரும் பள்ளி, கல்லூரி  மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாகவும், உரிய நேரத்தில் செல்ல வேண்டிய  நிலையாலும் படியில் தொங்கியபடியும், பேருந்தின் மேல் பகுதியில்  உட்கார்ந்துகொண்டும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து  வட்டார போக்குவரத்து அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வது  இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை  உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து படியில் பயணம்  செய்பவர்களை தடுக்க வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில்  கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: