×

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

தொண்டி, அக்.18:  தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதால், அதை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற போது தமிழகத்தில் படிப்படியாக மதுபான கடைகள் முடப்படும் என அறிவிப்பு செய்தனர். அதனடிப்படையில் 500 கடைகள் மட்டுமே மூடப்பட்டது. அதன் பிறகு தற்போது உள்ள அரசு எந்த கடையையும் மூடியதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசுக்கு கூடுதல் வருமானம் வரும் ஒரு வழி என்பதால் அரசும் இதில் கவனம் செலுத்துவதில்லை.

கூலி தொழிலாளிகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடையிலேயே கொடுத்து விட்டு செல்வதை பார்க்க முடிகிறது. இதனால் குடும்பங்கள் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகள் மதுபானம் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறியது, தமிழகத்தில் தற்போது மதுபானம் அருந்துவதால் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிர்பலி ஏற்படுகிறது. தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது சிறுவர்கள் அதிகளவில் மதுபானம் அருந்துவதாக தெரிகிறது. அதனால் தமிழக அரசின் அறிவிப்பான படிப்படியாக மதுபான கடையை அடைப்போம் என்பதை நிறைவேற்ற வேண்டும். மேலும் காந்தி ஜெயந்தி போல் பண்டிகை காலங்களிலும் மதுபான கடைக்கு விடுமுறை விடப்பட வேண்டும். அப்போதுதான் அனைவரும் சந்தோசமாக பண்டிகையை கொண்டாட முடியும்  என்றார்.


Tags : task force shops ,Tamil Nadu ,
× RELATED மக்களை இன்னல்படுத்தும் இ-பாஸ் முறை...