விவசாய நிலத்தில் பச்சிளங்குழந்தை சடலம்

கள்ளக்குறிச்சி, அக். 18:     

கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமம் அன்னை இந்திரா காலனி பகுதியை  சேர்ந்தவர் கோமதுரை, மின் ஊழியர். அப்பகுதியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. வீடுகட்ட அந்த நிலத்தில் இருந்து சுமார் 5 அடி பள்ளம் தோண்டி மண்  எடுத்ததாக கூறபடுகிறது. தற்போது பெய்த மழையால் அந்த பள்ளத்தில் மழைநீர்  தேங்கி கிடக்கிறது. அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கோமதுரை  குடும்பத்தினர் டிராக்டர் மூலம் வயல் ஓட்டி கொண்டு இருந்தபோது நிலத்தில்  தேங்கி கிடந்த தண்ணீரில் பச்சிளம் குழந்தை இறந்த நிலையில்  கிடந்ததை கண்டு டிராக்டர் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் கோமதுரைக்கு  தகவல் தெரிவித்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி  சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒரு நாள் அல்லது இரண்டு  நாட்களுக்கு முன்னர் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை யாரோ வயல் நில  பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.  
Advertising
Advertising

இதையடுத்து ேபாலீசார் தண்ணீரில் கிடந்த பச்சிளம்  குழந்தை சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வினோத்  கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து வயல்வெளியில் பச்சிளங்குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: