மாவட்டம் முழுவதும் 2.8 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி

சிவகங்கை, அக்.15:  சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியில் கால்நடைகளுக்கான 17வது சுற்று வாய் கால் காணை (கோமாரி) நோய்த் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கப்பட்டது. கலெக்டர் ஜெயகாந்தன் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இந்த சிறப்பு முகாம் 3.11.2019 வரை நடக்க உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 2.8 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கிராமம் கூட விடுபடாத அளவிற்கு கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலர்கள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் தவறாது கலந்து கொண்டு தங்களுடைய கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். இதன் மூலம் கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் காணை நோய் தாக்காமல் பாதுகாக்க முடியும் என்றார்.  இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமாரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் முருகேசன், துணை இயக்குநர் ராஜதிலகம், பால் கூட்டுறவுச் சங்க துணைப்பதிவாளர் புஷ்பலதா, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் முகமதுகான், ராம்குமார், கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: