×

பிள்ளையார்குளம் கிராமத்தில் அடிப்படை வசதியில்லாமல் அவதிப்படும் கிராமமக்கள்

சாயல்குடி, அக்.15: கடலாடி அருகே பிள்ளையார்குளத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் கடும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடலாடி ஒன்றியம், பிள்ளையார்குளம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு தெருச்சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிள்ளையார்குளம் கிராமமக்கள் கூறும்போது, இந்த கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வருவதில்லை. ஆழ்துளை கிணறு தூர்ந்துபோய் கிடப்பதால், உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து கிடக்கிறது. தண்ணீர் வராததால் கிராமத்திலுள்ள குடிநீர் தேக்க தொட்டிகள், குழாய்கள் பயன்பாடின்றி உள்ளது. குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டிற்கு தண்ணீரின்றி, ஊரணியில் அமைக்கப்பட்ட உறை கிணறு தண்ணீரை எடுத்து வருகிறோம்.

கூடுதல் தேவைக்கு டேங்கர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். தற்போது பெய்த மழைக்கு கிடக்கும் கலங்கிய கண்மாய் தண்ணீரை குளிக்கவும், சலவை செய்ய, கால்நடைகளுக்கு பயன்படுத்தி வருகிறோம்.
தேவர் சிலை முதல் கிழக்கு மற்றும் பள்ளி செல்லும் தெருக்களில் கழிவுநீர், மழைநீர் செல்ல வாறுகால்வாய் வசதியில்லாததால் கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து வீடுகளுக்கு முன் தேங்கி கிடக்கிறது. அதிலிருந்து கொசுகள் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவி வருகிறது. வாகனங்கள் செல்ல முடியாமல் பதிந்து கொள்கிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. கிராமத்திற்கு பொது கழிவறை வசதியில்லை. மின்கம்பங்களில் மின்வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து அச்சம் உள்ளது. இரவு நேரத்தில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. மாணவர்கள் வீட்டு பாடங்களை படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் கூடுதல் திறன்கொண்ட மின்மாற்றிகளை அமைக்க வேண்டும்.எனவே பிள்ளையார்குளம் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pillaiyargulam ,village ,infrastructure facilities ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...