×

பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீரை கொண்டு வரவேண்டும்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.15: கண்மாய் பாசனத்திற்காக வைகை தண்ணீரை கொண்டு வந்து பெரிய கண்மாயை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்திலே இரண்டாவது மிகப் பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயை வைத்து தான் இப்பகுதி ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று ஒருங்கிணைந்த திருவாடானை தாலுகா அழைக்கப்படுகின்றது. இந்த கண்மாய் சுமார் 20 கி.மீ நீளமுள்ளது. இந்த கண்மாயில் சுமார் 1,205 மி.க அடி கொள்ளளவு கொண்டது. ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நிரம்பினால் 72 சிறு கண்மாய்கள் பாசன வசதி பெறும். கடந்த 3, 4 வருடங்களாகவே சரியான மழை இல்லாத காரணத்தால் நீர் நிலைகள் முற்றிலும் வற்றி விட்டது. விவசாயம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகள் மிகுந்த மனவேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டமும் மிக வேகமாக குறைந்து வருகின்றது. வைகை அணை பகுதியால் நல்ல மழை பெய்து வருகின்ற நிலையில் வீணாகும் தண்ணீரை சேமித்து வைகை கால்வாய் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் அக்டோபர் 15ம் தேதி ஆகிவிட்ட நிலையில், இப்பகுதியில் சரியான மழை இல்லை. இந்த வருடமும் விவசாயம் விளையுமா? விளையாதா? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே வைகை தண்ணீரை கொண்டு வரவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

72 சிறு கண்மாய் பாசன சங்க தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கடந்த 3 வருடங்களாகவே விவசாயிகளாகிய நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். குடிக்க கூட தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வைகை தண்ணீரை ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வந்தால் நாங்கள் 3, 4 வருடங்களாக பட்ட கஷ்டத்திற்கு விவசாயம் கை கொடுக்கும். விவசாயிகள் கடன் சுமையிலும், மன கஷ்ட சுமையிலும் இருந்து மீளலாம். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பெருகினால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் செழிக்கும். விவசாயிகளின் நலன் கருதி கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வைகை தண்ணீரை கொண்டு வரவேண்டும்’’என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை