ரங்கநாத பெருமாள் கோயிலில் அம்பு விடுதல் திருவிழா

ரிஷிவந்தியம், அக். 10: ரிஷிவந்தியம் அருகே ஆதி திருவரங்கத்தில் 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடா வருடம் நவராத்திரியை முன்னிட்டு கொலு அமைக்கப்படுவது வழக்கம்.இதைத்தொடர்ந்து 9 நாட்கள் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 10ம் நாளான நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தின் மீது உற்சவர் ரங்கநாத பெருமாள் சிலை அமைக்கப்பட்டு கோயில் வளாகத்தின் முன் அம்பு விடுதல் திருவிழா நடந்தது.

அம்பு விடும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் ரங்கநாத பட்டாச்சாரியார் செய்தார். இவ்விழாவிற்கு ஊர் முக்கியஸ்தர் லட்சுமிகுமார் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகள் செய்தனர். விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், நிர்வாக செயல் அலுவலர் சூரியநாராயணன், அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பாண்டியன், மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ரிஷிவந்தியம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, திருவரங்கம் ஊராட்சி செயலர் அன்பு, எழுத்தர் பிரகாஷ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: