புதுப்பொலிவுபெறும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை

கள்ளக்குறிச்சி, அக். 10:     கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் தனிதனியாக கட்டிடம் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் நோயாளிகளுக்கு டாக்டர்கள், செவிலியர்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் இந்த மருத்துவமனைக்கு தேவையான கட்டிட வசதிகள் மற்றும் மருத்துவ செலவுகள் ஆகியவைக்கு தேவையான நிதியில் சுமார் 40 சதவீதம் மத்திய சுகாதாரதுறை மூலமாக தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த நிதியை தமிழக சுகாதாரதுறை முறையாக மக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றதா அல்லது பெயர் அளவிற்கு தான் மத்திய சுகாதாரதுறை மூலம் வழங்கப்படுகின்ற நிதியை பயன்படுத்துகின்றார்களா என்பது குறித்து நேரடியாக ஆய்வு செய்ய மத்திய சுகாதார குழு முடிவு செய்தது.    அதன்படி வருகின்ற 19 மற்றும் 21ம் தேதிகளில் விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 2 மாவட்டத்தில் இந்த குழு நேரடியாக ஆய்வு செய்ய உள்ளதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு பளீச்சின்று மாற்றும் பணி நடந்து வருகிறது. அதில் குறிப்பாக பிரசவ பகுதி, பிரசவத்திற்கு பின் கவனிப்பு பகுதி, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பகுதி, அறுவை அரங்கு, பச்சிளம் குழந்தை பகுதி (என்ஐசியு)  மற்றும் பெயர் பலகைகள் புதுப்பிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகம் ஜரூராக செய்து வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் ஆண்கள், பெண்கள் சிகிச்சை பிரிவு, மருத்துவமனை நுழைவு வாயில் உள்ளிட்ட அனைத்து கட்டிட பகுதிகள் முழுவதும் வண்ணம் அடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அரசு மருத்துவமனை என்றாலே ஒரு வகையான நாற்றம் ஏற்படும். ஆனால் சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அந்த நாற்றங்கள் முற்றிலும் குறைந்துள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் பாதுகாவலர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

எனவே அதிகாரிகள் வருகைக்காக மட்டும் இல்லாமல் எப்போதும் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை கட்டிடத்தை மிஞ்சும் அளவிற்கு புது பொலிவுடனும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். எனவே அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாகவும், புதுபொலிவுடனும் வைத்திருக்க வேண்டும் என்றால் மருத்துவமனைக்கு தினந்தோறும் சிகிச்சைக்கு வந்து செல்கின்ற பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: