விழுப்புரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பிரதான சாலைகளில் மீண்டும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு

விழுப்புரம், அக். 9: போலீசாரின் அலட்சியத்தால் விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளான பாகர்ஷாவீதி, நேருஜிவீதி, எம்ஜிரோடு உள்ளிட்ட சாலையோரங்களில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க நகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு காவல்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்றினார்கள். மேலும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் வராதவகையில் தினமும் காவல்துறையினர் ரோந்து சென்ற வண்ணம்இருந்தனர். நாளடைவில் இதனை முறையாக பின்பற்றாததால், நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதை வியாபாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். மேலும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertising
Advertising

குறிப்பாக பாகர்ஷா வீதி, எம்ஜிரோடு, நேருஜி ரோட்டில் தொடர்ந்து, காய்கறி கடைகள், பழக்கடை வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். பாகர்ஷா வீதியின் நுழைவு வாயிலில் அம்பேத்கர் சிலை முன்பே பலர் கொட்டகை அமைத்தும் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நடந்து செல்வதற்கு கூட சாலையில் இடமில்லாத நிலை உள்ளது. மேலும் கடை வைத்து நடத்தும் வணிகர்கள் தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.நகராட்சி நிர்வாகமும் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தால் உடனடியாக சங்க நிர்வாகிகள் மூலம் காவல் நிலையத்திற்கு வந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

விழுப்புரம் நகரில் தீராத பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. குறுகலான சாலைகள், நடைபாதை ஆக்கிரமிப்புகள், நேருஜி வீதி, பாகர்ஷா வீதி, காமராஜர் வீதி போன்ற நகரின் பிரதான சாலைகளில் உள்ள நடைபாதைகளில் கடைகளை வைத்து ஆக்கிரமித்துக்கொள்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் மூலம் உரிய தீர்வு காணப்பட்ட நிலையில், அதே போலீசாரின் அலட்சியத்தால் சில ஆண்டுகளில் மீண்டும் நடைபாதைகள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: