பழநியில் கோயில் நிர்வாகம் பஸ் இயக்க வேண்டும்

பழநி, அக்.4: பழநி நகரில் உள்ள ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் கோயில் நிர்வாகம் சார்பில் பஸ் இயக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஸ் மற்றும் ரயில் மூலமாகவே பழநி வருகின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து மலைக்கோயில் அடிவாரத்திற்கு செல்ல 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளன. இந்த வழித்தடத்திலேயே பஸ் நிலையமும் உள்ளது. ஆனால், ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் அடிவாரத்தில் இறக்கிவிட ஆட்டோ மற்றும் குதிரைவண்டிகளில் அளவுக்கதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சில ஆட்டோக்களில் ரயில் நிலையத்தில் இருந்து அடிவாரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.90 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பஸ் நிலையத்தில் இருந்து அடிவாரத்திற்கு ரூ.70 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணங்களை முறையாக வசூலிக்க வேண்டுமென பலமுறை அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டும், உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. பழநியில் இருந்து கோவை மற்றும் மதுரை போன்ற ஊர்களுக்கு ரயில் கட்டணமே ரூ.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆட்டோ மற்றும் குதிரைவண்டிகளில் குறைந்த தூரத்திற்கு இந்த அளவிற்கு கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் வேறு வழியின்றி இவற்றை பயன்படுத்த வேண்டி உள்ளது. போக்குவரத்து கழகம் சார்பில் சில ரயில்கள் வரும் நேரங்களில் மட்டும் டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களும் பஸ் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

மேலும், ரயில்கள் மற்றும் பஸ்களில் வரும் பக்தர்களிடம் பூஜை பொருட்கள் விற்பனை மற்றும் விரைவில் சாமி தரிசனம் என ஏமாற்றும் போலி கைடுகளின் கைவரிசைகளை காட்ட அடிவாரம் வரை ஏராளமானோர் சுற்றித் திரிந்து வருகின்றனர்.

இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து பக்தர்களை பாதுகாக்க ரயில்நிலையத்தில் இருந்து கோயில் நிர்வாகம் சார்பில் அடிவாரம் குறைந்த கட்டணத்தில் பஸ் இயக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ் ரயில் நிலையத்தில் துவங்கி ரயில்வே பீடர் சாலை, பஸ் நிலையம், தேவர் சிலை, தண்டபாணி நிலையம், கோயில் அலுவலகம், ரோப்கார் நிலையம், வின்ச் நிலையம், திருஆவினன்குடி கோயில் வழியாக செல்லுமாறு வழித்தடம் அமைத்தால் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்குமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: