திருப்பூர் இன்ஸ்பெக்டருக்கு ‘உத்தமர் காந்தி’ விருது

திருப்பூர், அக். 2: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு தமிழக அரசின் சார்பில் உத்தமர் காந்தி விருது அறிவித்துள்ளனர். தமிழக அரசு சார்பில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் உத்தமர் காந்தி விருது அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2020ம் ஆண்டிற்கான உத்தமர் காந்தி விருதுக்கு திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவியேற்றார்.

அதே நேரத்தில் மதுவிலக்கில் சேலம் சரக கண்காணிப்பாளரின் கீழ் தனிப்படை இன்ஸ்பெக்டராக இருந்து இதுவரையில் 11 எரிசாராய லாரிகள் உள்பட 1 லட்சத்து 48 ஆயிரம் லிட்டர் சாராயம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளார். இக்குற்றங்களில் முக்கியமானவர்களாக கருதப்பட்ட 9 பேரை கைது செய்துள்ளார். இதற்காகவே அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள மல்லங்குப்பம் கிராமம் ஆகும். தந்தை பெயர் செல்வராஜ், தாயார் பெயர் காஞ்சனா. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2000ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வுசெய்யப்பட்டார்.

Related Stories: