உத்தனபள்ளியில் அரசு பள்ளி முன்பு கொட்டிய கற்குவியல்

சூளகிரி, செப்.30: உத்தனப்பள்ளி ஊராட்சியில், அரசு பள்ளி முன்பு கொட்டி கிடக்கும் கற்குவியல் மற்றும் செடிகொடிகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலிறுத்தி உள்ளனர்.சூளகிரி தாலுகா உத்தனபள்ளி ஊராட்சியில், தேவஸ்தான கிராமம் உள்ளது. இங்கு உத்தனபள்ளி-சூளகிரி நெடுஞ்சாலையோரத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, பள்ளி முன்பு சாலை விரிவுபடுத்தும் பணி நடந்தது. இதற்காக அங்குள்ள பாறாங்கற்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. சாலை சீரமைத்த பின்னர், கற்குவியல்களை அப்புறப்படுத்தாமல், பள்ளி முன்பே கொட்டி சென்று விட்டனர். இதில், வெடிக்காத சில குப்பிகள் கிடந்ததை, அப்பள்ளி மாணவர்கள் கண்டு எடுத்தபோது வெடித்ததில்,  2 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

தற்போதும் இந்த கற்குவியல்களில் வெடிமருந்து குப்பிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த கற்குவியலில் இருந்து பாம்புகளும் அடிக்கடி பள்ளிக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மாணவர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பள்ளி முன்பு கொட்டிகிடக்கும் கற்குவியல் மற்றும் முட்புதர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: